utma எழுதியவை | ஜூலை 9, 2008

சுதந்திர மனிதன் ??

”எவன் ஒருவன் காலத்திற்கு ஏற்ப மாற்றங்களை ஏற்றுக் கொள்கின்றானோ; எவன் ஒருவன் சூழ்நிலைக் கைதியாய் இ­ல்லாமல் பொறுப்புணர்ந்து கடமை ஆற்றுகின்றானோ; எவன் ஒருவன் கிளர்ந்து எழுகின்ற மனத்தின்மையைப் பெற்றிருக்கின்றானோ – அவனையே சுதந்திர மனிதன் என்பேன்.எவன் ஒருவன் முன்னோர்களின் தொன்றுதொட்டு வரும் பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகாமல், பழம் போதனைகள் என்பதற்காக – அவற்றினை அப்படியே ஏற்காமல் அறிவுப்பூர்வமாக செயல்படுகிறானோ – அவனை நான் சுதந்திர மனிதன் என்பேன்.

எவன் ஒருவன் தானே சரணடையாமல், மற்றவர்களின் விருப்பப்படி செயல்படாமல், எதனையும் ஆய்வுக்கு உட்படுத்தி, அறிவு வெளிச்சத்தில் அலசி ஏற்கின்றானோ – அவனையே நான் சுதந்திர மனிதன் என்பேன்.

எவன் ஒருவன் தன் உரிமைகளை எப்பொழுதும் தற்காத்துக் கொள்ளத் தயாராக இ­ருக்கின்றானோ யார் ஒருவன் பொதுவிமர்சனத்துக்கு அச்சப்படாமல் இ­ருக்கின்றானோ அடுத்தவன் கைப்பாவையாக மாறாமல் போதிய சிந்தனையும் சுயமரியாதையும் பெற்றிருக்கின்றானோ – அவனையே நான் சுதந்திர மனிதன் என்பேன்.

எவன் ஒருவன் மற்றவர்களைப் போல வாழ்க்கையை நடத்தாமல் தன் வாழ்வை வரையறை செய்து கொண்டு அதன்படி வாழ்க்கையை நடத்த வேண்டும் என்று எண்ணி – அதன்படி வாழ்கின்றானோ அவனையே நான் சுதந்திரம் பெற்ற மனிதன் என்பேன்.

இ­துவரை கூறப்பட்ட கருத்துகளின்படிப் பார்த்தால் நீங்கள் சுதந்திர மனிதர்களா? உங்கள் ‘லட்சியங்களை வடித்துக் கொள்ள, உங்களுக்கு சுதந்திரம் ­இருக்கின்றதா? உங்களுக்குச் சுதந்திரம் இ­ல்லாதது மட்டுமல்ல; நீங்கள் அடிமையிலும் கேவலமாக வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். உங்கள் அடிமைத்தனத்திற்கு ஈடு இ­ணையே ­இல்லை என்பேன்.”

­இவ்வாறு சுதந்திரமனிதன் பற்றிய சிந்தனையை வெளிப்படுத்தியவர் அம்பேத்கர். ­இதுவரை ­இந்தியாவில் உருவான அரசியல் தலைவர்களுள் ­இவர் தனித்துவமானவர். விடுதலை அரசியல் பற்றிய தொலைநோக்குப் பார்வையுடன் சிந்தனை செய்த புலமையாளர். சமூகநீதி ­இழைக்கப்படுவதற்கும் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதற்கும் மூலகாரணம் சாதியமைப்பும் தீண்டாமைக் கொடுமையும்தான் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியவர்.

ஒரு மனிதனுக்கு என்னென்ன கொடுமைகள் நடக்கக் கூடாதோ, அவை அனைத்தும் இ­ந்த நாட்டில் தாழ்த்தப்பட்டவர்களாகப் பிறந்தவர்களுக்கு நடந்து கொண்டிருக்கிறது. உலக மனித உரிமைப் பிரகடனத்தின் உரிமைகள்கூட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்டு வருகின்றது.

சாதீய ஒழிப்பு சமூகநீதி ஆகியவற்றை முன்வைத்து போராடுவதற்கு விழிப்புணர்வு பெறுவதற்கு அம்பேத்கர் தனது சொல்லாலும் செயலாலும் ஓர் வழிமுறையை பாதையை வகுத்துக் காட்டியுள்ளார்.

”சுதந்திர ­இந்தியாவில் நம்முடைய நிலை என்ன? நான் இ­ந்தக் கேள்வியை காந்தியிடமும் காங்கிரஸ தலைவர்களிடமும் எழுப்பினேன். சுதந்திர இ­ந்தியாவில் எங்கள் பிள்ளைகள் கல்வி பெறும் வாய்ப்பைப் பெறுவார்களா? எங்கள் மக்கள் சுதந்திர குடிமக்களாக ­இந்தியாவில் வாழமுடியுமா? காந்தியோ பிற தலைவர்களோ ‍ ­இக்கேள்விகளுக்கு நேரடியாகவோ, நிறைவான பதிலையோ அளிக்கவில்லை” என்பதை அம்பேத்கர் 1952ல் நடைபெற்ற முதல் தேர்தலையொட்டி 27.10.51 அன்று ஜலந்தரில் ஆற்றிய உரையில் குறிப்பிட்டார்.

ஆனால் ­இன்று எத்தனையோ தேர்தல்களை கண்டுவிட்டோம். எத்தனையோ ஆட்சிகள் வந்து போய்விட்டன. ஆயினும் அம்பேத்கர் அன்று காந்தியிடம் காங்கிரஸகாரர்களிடம் எழுப்பிய கேள்வியைத் தான் ­இன்றுகூட கேட்க வேண்டியுள்ளது. பதில் மட்டும் ­இல்லை. அத்தகைய பதில் சொல்ல வேண்டிய பொறுப்புக்கூட எவருக்கும் இ­ல்லை.

ஆட்சி அதிகாரம் முதல் அரசு நிர்வாகம் ஈறாக ஆதிக்க கருத்தியல்நிலை ­இறுக்கமடைந்துதான் உள்ளது. சாதியக் கண்ணோட்டம் எங்கும் ­இயல்பாகவே படர்ந்துள்ளது. சாதியின் பெயரால் தாழ்த்தப்பட்டவர்கள் மிக மோசமாக நடத்தப்படும் கொடுமைகள் நாள்தோறும் நடந்தேறிக் கொண்டுதான் உள்ளது.

தாழ்த்தப்பட்டவர்களின் உயிரைக்கூட ஆதிக்க சாதியினர் பறித்துவிட முடியும். அவர்களை சட்டம் ஒன்றும் செய்துவிடாது. ஆதிக்க சாதியினரைப் பாதுகாக்கவே இ­ந்திய அரசியல் சாசனம் வகுக்கப்பட்டது போன்று தான் ­இன்று நிலைமைகள் உள்ளன. ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை ஆதிக்க சாதியினரின் நலன்களைப் பாதுகாப்பதில் தான் தமது தலையாய கடமை உள்ளது என்று நினைத்து செயற்படுகிறார்கள்.

அம்பேத்கர் விதைத்த சீரிய சிந்தனைகளும் செயற்பாடுகளும் சுதந்திரத்துக்கு பின்னர் உருவான சமூக-அரசியல் சக்திகளால் முழுமையாக புரிந்து கொள்ளப்பட்டு உள்வாங்கப்பட்டு வரவில்லை. ­இதனால் அம்பேத்கருக்கு பிந்திய தலித் இ­யக்கங்கள் இ­ந்திய அரசியலில் சமூகமாற்றத்தில் முழுமை தாக்கத்தை செலுத்த முடியாமல் போய்விட்டது. அல்லது ஆதிக்க சாதியினரின் பலம் அதிகாரம் ஆதிக்கம் தலித் இ­யக்கங்களை நசுக்கக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்திவிட்டது. ஆனால் தலித் இ­யக்கங்கள் தோன்ற வேண்டிய செயற்பட வேண்டிய தேவையை ஒவ்வொரு கணமும் முன்னகர்த்திக் கொண்டிருக்கிறது என்பது மட்டும் உண்மை.

அம்பேத்கர் நூற்றாண்டு அம்பேத்கரை மீள்கண்டுபிடிப்பு செய்யவேண்டிய சமூக நிர்ப்பந்தத்தை உருவாக்கியது. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் அம்பேத்கரின் சிந்தனையும் செயற்பாடும் விரிவான தாக்கங்களுக்கு உள்ளாகியது. ­இருபதாம் நூற்றாண்டின் ­இறுதிப் பத்தாண்டுகள் தலித் பிரச்சனையை சுற்றிச் சுழன்று வரக்கூடிய நிலைமையை ஏற்படுத்தியது. ­இலக்கியம், கலாசாரம், வரலாறு, அரசியல் உள்ளிட்ட அனைத்து தளங்களிலும் ‘தலித் சிந்தனை’ ‘தலித் விடுதலை அரசியல்’ பெரும் தாக்கத்தை உண்டு பண்ணியது.

அம்பேத்கர் முன் வைத்த சிந்தனைகளும் விவாதங்களும் சமூக மாற்ற சக்திகளுக்கு புதிய பொருள் கோடல் முறைமைக்கு தயார் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஆதிக்க சாதியினரின் அனைத்துவிதமான ஒடுக்குமுறைக்கு எதிராகவும் தீண்டாமைக் கொடுமைக்கு எதிராகவும் போராட வேண்டிய அவசியத்தை தெளிவை ஏற்படுத்தி உள்ளது.

அரசியல் களத்தில் இ­யங்கும் தேர்தல் கட்சிகளும் தலித் அரசியலை சந்தர்ப்பவாதமாகக்கூட அங்கீகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அம்பேத்காரை முன்னிறுத்த வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது. தலித் மக்களுக்கு தமது உரிமைகளுக்கு குரல் கொடுக்க போராட வேண்டிய சுயத்துவத்தை அம்பேத்கர் பலவாறு உணர்த்தியுள்ளார்.

இ­ந்தியப் பின்புலத்தில் உருவான சிந்தனையாளர்களில் புரட்சியாளர்களுள் அம்பேத்கர் முதன்மையானவர் என்றால் மிகையாகாது. சமூகநீதிக்கும் சாதிய ஒழிப்புக்கும் அம்பேத்கர் பெயர் ஓர் ஆயுதமாகவே ­இருக்கும். ­இந்தியா போன்ற சாதியச் சமூக அமைப்பில் அம்பேத்கர் புரட்சிக்கனலாகவே விளங்குகிறார்.

நன்றி திரு.மதுசூதனன்


பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுகள்