utma எழுதியவை | ஜூன் 14, 2008

சேகுவேரா – (அஜயன் பாலா)

ஆனந்த விகடனில் நாயகன் என்ற தலைப்பில் தோழர் அஜயன் பாலா சே வைப்பற்றி எழுதிய தொடர் இதோ உங்கள் பார்வைக்கு

விடுதலை வேட்கை கொந்தளிக்கும் ஒரு தேசத்தின் வெறுமனே காற்றில் ஆடும் ஒரு போராளியின் குண்டு துளைத்த சட்டை, விலைமதிப்பற்றது. அது காணும் எண்ணற்ற இதயங்களில் புரட்சியின் விதைகளைத் தூவிச் செல்லும். சே குவேராவின் திறந்த விழிகளும் அங்கே அப்படித்தான் இருந்தன!

தென் கிழக்கு பொலிவியாவின் வாலேகிராண்டேவில், ஒரு பள்ளிக்கூட வளாகத்தில், 1967, அக்டோபர் 9&ம் தேதியன்று குண்டுகளால் துளைக்கப்பட்ட சேகுவேராவின் உடல் கிடத்தப்பட்டது. திறந்துகிடந்த அவரது விழிகளில் இரண்டு நட்சத் திரங்கள் இடையறாது மின்னுவதைப்போல உணர்ந்ததாகச் சொன்னார்கள். தான் இங்கே விதையாகக் கிடத்தப்பட்டுள்ளோம் என்ற அவரது பேருணர்வின் மிச்ச ஒளியாகக்கூட அது இருந்திருக் கலாம்!

இன்றும் பெருநகரச் சாலைகளில் எதிர்ப்படும் ஏராளமான இளைஞர்களின் டி-ஷர்ட்களின் மூலமாக உலகின் எல்லா மூலை முடுக்குகளிலும் ‘சே’ என்று அழைக்கப்படும் சேகுவேராவைத் தரிசிக்கிறது உலகம்! யார் இந்த இளைஞர்கள்? சேகுவேராவைப் பற்றி இவர்களுக்கு என்ன தெரியும்?

சேகுவேராவின் முகம் பதித்த ஆடைகளை அணிவதன் மூலம் இவர்கள் என்ன உணர்வைப் பெறுகிறார்கள்? தன் தினசரிச் செலவுகளில் பெரும் சதவிகிதத்தை அமெரிக்காவுக்கு ஒப்புக்கொடுக்கும் இன்றைய நவீன இளைஞர்களின் செயல்பாடுகளுக்கு முற்றிலும்எதிரானது அல்லவா சேகுவேராவின் எண்ணமும் உணர்வும்?

இந்த வரலாற்று முரண்நகைகூட ஒரு வகையில் சேகுவேராவின் வெற்றியே! எந்த நாடு அவரை முற்றா கத் தீர்த்துக்கட்டியதாக நினைத்ததோ, அதே தேசத்தில் எண்ணற்ற போஸ்டர்களிலும், டி&ஷர்ட்களிலும், சாவிக் கொத்துகளிலும், காபிக் கோப்பைகளிலும் அவரை அச்சடிக்கவைத்து, உலகம் முழுக்கக் கொண்டாடப்படும் ஒருவனை நம்மால் வேறு எப்படிக் கணிக்க முடியும்?

இந்த வரலாற்று முரண்நகைகூட ஒரு வகையில் சேகுவேராவின் வெற்றியே! எந்த நாடு அவரை முற்றா கத் தீர்த்துக்கட்டியதாக நினைத்ததோ, அதே தேசத்தில் எண்ணற்ற போஸ்டர்களிலும், டி&ஷர்ட்களிலும், சாவிக் கொத்துகளிலும், காபிக் கோப்பைகளிலும் அவரை அச்சடிக்கவைத்து, உலகம் முழுக்கக் கொண்டாடப்படும் ஒருவனை நம்மால் வேறு எப்படிக் கணிக்க முடியும்?

‘சே’வுக்கு இரண்டு வயது இருக்கும். நீச்சல் ஈடுபாடு கொண்ட அவரது தாய் செலியா, ஒரு குளிர் காலைப்பொழுதில் நதிக்கு தன் குழந்தையைக்குளிப்பாட்ட அழைத்துச் சென்றார். நடுக்கமூட்டும் குளிர் நதியில் தன் குழந்தையை அவர் நீராடவைக்க, ஈர உடையில் கிடுகிடுத்துக்கிடந்த குழந்தையின்நுரையீரலை நிமோனியா நோய் தாக்கி, ஆஸ்துமா அவரை இறுகப்பற்றியது.

வாழ்நாள் முழுக்க அந்த நோய் சேகுவேராவை உருக்குலைத்தது.பின்னாளில் போர்க் காலங்களில், காடுகளிலும் மலைகளிலும் சுற்றித் திரிந்தபோது ஆஸ்துமாவால் அவர் பட்ட வேதனைகள் கொஞ்ச நெஞ்சம் அல்ல. வேறொரு வகையில் சேகுவேராவுக்கு ஆஸ்துமா ஒரு பரிசு என்று கூடக் கருதலாம். உளவியல்ரீதியாகப் பார்க்கும்போது, சிறு வயதிலேயே பீடித்த அந்தக் கொடிய நோயின் மனவாதையிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ளும் விதமாகவே, அசாத்திய வீரனாகவும் கட்டற்றஆற்றல் கொண்டவராகவும் தன்னைக் கற்பனை செய்யத் தூண்டியிருக்குமோ அது என்று தோன்றுகிறது. ஏனெனில், ‘சே’வின் எல்லாத் தகுதிகளுக்கும் பின்னாலிருந்து செயல்படுத்தியது அவரது உடலிலிருந்தும் மனதிலிருந்தும் பீறிட்ட அந்தக் கட்டற்ற ஆற்றல்தான்.

அதுதான் சிறுவயதில் முரட்டுத்தனமான ரக்பி விளையாட்டில் அவரை ஈடுபடுத்தியது. ஆடுகளத்தில் பின்னிருந்து ஆடும் தடுப்பாட்டக்காரனின் நிலையிலேயே பெரும்பாலும் விளையாடுவார் ‘சே.’ பிற்காலத்தில் தான் மேற்கொண்ட கெரில்லா யுத்த காலங்களில், எதிரிகளைத் தன்னிச்சையாக செயல்படவைத்து, அவர்கள் வலுவிழக்கும் தருணத்தில் கண்மூடித்தனமாகத் தாக்கி முற்றாக நிலை குலையவைக்கும் தந்திரத்துக்கு இந்த விளையாட்டே அவருக்குப் பெரும் முன்னோட்டமோ!
சிறுவயதிலிருந்தே அவருக்குப் பிடித்தமான மற்றொரு விளையாட்டான சதுரங்கமும், எதிரிகளை வீழ்த்தும் இதே தந்திரங்களைக் கொண்டு இருந்தது ஆச்சர்யமான ஒன்று. பிற்காலத்தில் போர்க்களத்துக்குத் தேவையான மன இயக்கத்தை, சிறுவயதிலிருந்தே அவருக்கே தெரியாமல் அவருக்கான சூழல்கள் உருவாக்கித் தந்திருக்கின்றன.

அக்கால கட்டங்களில் ‘சே’வின் தந்தை எர்னஸ்டோ கட்டடங்களைக் கட்டித் தரும் தொழிலில் ஈடுபட்டு இருந்தார். இதனால் அவரது வீட்டைச் சுற்றி எண்ணற்ற கூலித் தொழிலாளிகளின் ஏழை வீடுகள் இருந்தன. அவை, அட்டைகளாலும் தகரங்களாலும் நிர்மாணிக்கப்பட்ட குடிசைகள். அந்த வீடுகளில் இருந்த குழந்தைகள்தான் ‘சே’வின் விளையாட்டுத் தோழர்கள். ‘சே’விடம் இயல்பாகவே ஒரு தலைமைப் பண்பு உருவாகிவந்தது. எந்தக் கவலையும் இல்லாமல் அவர்களுடன் விளையாடிப் பொழுதைக் கழிப்பார் ‘சே’. மாலையில் மீண்டும் தன் பணக்கார வீட்டுக்குத் திரும்பியதும், பகல் முழுக்கப் பார்த்த ஏழைச் சிறுவர்களின் வாழ்வை தன் வீட்டுச் சூழலுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் கேள்விகள் முளைத்தன. அந்த ஏழைக் குழந்தைகளின் வாழ்வு நிலை அவரைச் சங்கடப்படுத்தியது. தனக்கும் அவர்களுக்குமான இடைவெளிக்கான காரணம் என்ன, அதை எப்படி நம்மால் சமப்படுத்த முடியும் என்பது குறித்து அந்தப் பிஞ்சு இதயம் யோசித்திருக்கக்கூடும். இப்படியெல்லாம் சிந்தனை வயப்பட்ட ஒருவரால் மட்டுமே அதற்கான விளக்கவுரை எழுத, பின்னாட்களில் தன் வாழ்க்கையையே அர்ப்பணிக்க முடியும்.

கல்வியைப் பொறுத்தவரை கணிதம் மற்றும் ஆங்கிலத்தில் மிகச் சாதாரண மனிதராகவே இருந்தார் ‘சே’. இசையும் நடனமும் இன்னும் மோசமாக அவரது திறமைக் குறைவை அவருக்கு உணர்த்தியது. மாறாக, இலக்கியமும் வரலாறும் அளவுக்கதிமாக வசீகரித்தன. நோபல் பரிசு பெற்ற இலக்கியங்களை சிறு பருவத்திலேயே தேடிப்பிடித்து வாசிக்க ஆரம்பித்தார்.

அப்போதே கவிதை எழுதுவதில் ஆர்வமுடையவராக இருந்தார். வளரிளம் பருவத்தில் பாப்லோ நெருடாவின் வார்த்தை அலைகள், ‘சே’வின் இதயத்தை மிகவும் பரவசப்படுத்தின. நெருடாவின் பெரும்பாலான கவிதைகளை மனப்பாடமாக ஒப்பிக்கும் அளவுக்கு ஈடுபாடு. ஜாக் லாண்டன், எமிலியோ சல்காரி, ஜூல்ஸ் வெர்ன், சிக்மண்ட் ஃப்ராய்ட், பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் போன்றவர்களைத் தன் கல்லூரி படிப்பின் துவக்க நாட்களுக்குள்ளாகவே வாசித்திருந்தார். எழுத்தாளராக வேண்டும் என்ற கனவு அவரிடம் கனன்றுகொண்டு இருந்ததால், தன்னைச் சுற்றியுள்ள அனைத்தையும் தொகுப்பாக்கி, பின் பகுத்துப் பார்க்கும் தன்மையும் அவரிடம் இருந்தது.

பிறப்பில் ஐரோப்பிய ஸ்பானிய இனத்தைச் சேர்ந்தவராக இருந்ததால், ‘சே’வின் நடவடிக்கை களில் ஒரு கட்டுப்பாடும் ஒழுக்கமும் இருந்தன. புரட்சியாளராக அவர் பின்னாளில் உருவெடுத்த போது கட்டற்ற ஆற்றலைக் கட்டுப்படுத்தி திட்டமான ஒரு பாதையில் அவரை நெறிப்படுத்த, இது பெரிதும் உதவியாக இருந்தது.
பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, மருத்துவப் படிப்பை ‘சே’ தேர்ந்தெடுத்ததற்குப் பல காரணங்கள் உண்டு. தன் பாட்டி இறப்பதற்குக் காரணமாக இருந்த புற்றுநோய்க்கு மாற்று கண்டு பிடிக்கும் பொருட்டு மருத்துவம் பயின்றார் என்பதும் அவற்றில் ஒன்று. தனது மருத்துவப் படிப்பு காலத்தில் ‘சே’ வசீகரத்தின் வசந்தத்தில் இருந்தார். கைகளை விரித்து உற்சாகக் குரல் எழுப்பி நண்பர்களிடம் நாயகனாக வலம் வந்தார்.

அப்போது அவரின் மேல் புரட்சியின் எந்த சிறுநிழலும் விழுந்திருக்கவில்லை. புத்தக வாசிப்பு, நண்பர்கள், விளையாட்டு என அவரது உலகம் உல்லாசமாக இருந்தது.

தன் நண்பர்களைச் சந்திக்க, ஃப்யூனஸ் அயர்ஸிலிருந்து 78 கி.மீ தொலைவில் இருந்த கோர்டோபா எனும் நகரத்துக்கு அடிக்கடி பயணித்தார். அக்காலங்களில் அவரது வசீகரம், உயர் அழுத்த மின்சாரம் போல பெண்களின் இதயங்களைப் படபடக்கவைத்தது. கொச்சையான சிரிப்பும், கட்டற்ற சுதந்திரத்தைப் பறைசாற்றும் பின் தள்ளப்பட்ட கேசமும், அசிரத்தையான உடைகளும், அதிகாரத் தைக் கேலி செய்யும் பாவனைகளுமாக எதற்கும் வசப்படாத வித்தியாசமான தோற்றத்தில் வலம் வந்தார் ‘சே’! இருந்தும், இறந்தும் பெற்ற எல்லாப் பெருமைகளுக்கும், அவரது இந்தக் கட்டற்ற வசீகரமும் ஒரு காரணம். புறத் தோற்றத்தைத் தாண்டி அவரது கண்ணில் பிரகாசித்த ஒளிக்கு அவரது ஆன்ம விசாலமே காரணமாக இருந்தது.

1960 மார்ச் 5&ம் தேதி, ஹவானாவின் வீர மரணம் அடைந்த போர் வீரர்களுக்கான ஓர் அஞ்சலிக் கூட்டத்தில் கலந்து கொண்டபோது ஆல்பர்ட்டோ கோர்டா (Alberto Korda) என்பவர் எதேச்சையாக எடுத்த ‘சே’வின் புகைப்படம் பின்னாளில் 20&ம் நூற்றாண்டை அடையாளப் படுத்தும் மிகச் சிறந்த புகைப்படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது ஒன்றே இதற்குச் சான்று!

1951&ல் மருத்துவப் படிப்பு இன்னும் முழுமையாக முடிந்திராத தறுவாயில் ‘சே’வுக்கும் அவரது நண்பர் உயிர் வேதியியல் மாணவர் ஆல்பர்ட்டோ கிரனாடோவுக்கும்(Alberto Grenado) ஒரு வித்தியாசமான ஆசை தோன்றியது. தென் அமெரிக்கக் கண்டம் முழுக்க மோட்டார் சைக்கிளில் சுற்றிப் பார்க்க வேண்டுமென்ற ஆசை!

அதுதான் உலகத்தின் மிக உன்னதமான ‘மோட்டார் சைக்கிள் டைரி’!
நண்பர் ஆல்பர்ட்டோ கிரனாடோவுடன் ‘சே’ மோட்டார் சைக்கிள் பயணம் புறப்பட்டார். இருவரின் விருப்பத்துக்கும் பின்புலமாக இருந்து தூண்டியது
அவர்களின் மருத்துவப் படிப்பு.

தென் அமெரிக்கா முழுக்கத் தொழுநோய் பீடித்தி ருந்த காலம். அது குறித்து ஆய்வு செய்யவும், அதற்குத் தங்களால் எதுவும் மருந்து கண்டுபிடிக்க முடியுமா என்ற தேடலுமே அந்தப் பயணத்துக்கான ஆரம்பம்.

சித்தார்த்தன், புத்தன் ஆன கதை போல பயணம்தான் ‘சே’வின் பாதைகளைத் தீர்மானிக்கும் ஆரம்பமாகவும் இருந்தது. வெவ்வேறான நிலப்பரப்புகளிடையே பயணித்து தங்களது கலாசார அறிவை வளர்த்துக்கொள் வதற்கும் அது உதவும் என்று அவர்கள் நினைத்தனர். 500 சிசி நார்டன் மோட்டார் சைக்கிளில், சொற்ப ஆடைகளும், மனது நிறையத் தன்னம்பிக்கையுமாக, 1951 டிசம்பர் 29&ல் புறப்பட்ட அந்தப் பயணம், ‘சே’வின் வாழ்க்கையைத் திசை திருப்பியது.

அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணக் குறிப்புகள் தான், ‘மோட்டார் சைக்கிள் டைரி’ என்ற பெயரில் உடன் பயணித்த கிரனாடோவால் எழுதப்பட்ட பிரபல புத்தகம்.

அப்போது ‘சே’வுக்கு வயது 23. தோழர் கிரனாடோவுக்கு 29. இளமையின் காற்று தழுவிக்கொண்டு இருந்த ஒரு குளிர் இரவில், துவங்கியது பயணம்.

காலத்தை உணர்தல் என்பது அறிவின் மூலமாக நிகழ்வதன்று, அது புலன்களின் வழியாக உணர்வது. 23 வயதில் மோட் டார் சைக்கிளில் ஏறக்குறைய 10,000 கி.மீ. பயணம் செய்யும் அவரது துணிச்சல் நமக்கு இதைத்தான் கற்றுத் தருகிறது. எண்ணற்ற மலைகள், நதிகள், வனங்கள், பாலைவனங்கள் இவற்றினூடே நிகழ்ந்த அந்தப் பயணம் பல்வேறான அனுபவங்களைக்கொண்டு இருந்தது.

உழைப்பாளிகள், உழைப்பைச் சுரண்டு பவர்கள், தொழு நோயாளிகள், காவலர்கள், அறிவுஜீவிகள், முட்டாள்கள், அடிவருடிகள், பண முதலைகள், பராரிகள், திருடர்கள் மற்றும் எண்ணற்ற காதலிகள் என வெவ் வேறான மனிதர்களையும் அனுபவங்களை யும் தந்த அந்தப் பயணத்தில் ‘சே’வினுடைய ஆஸ்துமாவும் தன் பங்குக்கு அவரைப் பெரிதும் இம்சித்தது.

சிலி, பெரு, கொலம்பியா என நீண்ட அந்தப் பயணம் ஏறக்குறைய ஆறு மாதங்களைக் கடந்திருந்தது. தொழுநோயாளிகளின் தங்குமிடங்களைத் தேடித் தேடிச்சென்று, அவர்களின் தோளில் கை போட்டு உண்டு, உறங்கி, கால் பந்தாடிய ‘சே’வின் உள்ளத்தில் பலவிதமான உணர்ச்சிப் பேரலைகள்!

இறுதியாக 1952, ஜூலை மாதம் அந்த நெடிய பயணம் முடிவுக்கு வந்தபோது, ‘சே’ முழுவதுமாக மாறியிருந்தார். தென் அமெரிக்கக் கண்டம் முழுவதும் மக்களின் ஏழ்மை, பிணி, அறியாமை, வர்க்க வேறுபாடுகளுக்குக் காரணமாக அமெரிக்காவும் அவர்களது சி.ஐ.ஏ. உளவு நிறுவனமும் செயல்படுவதை அறிந்தார். லத்தீன் அமெரிக்க நாடுகளில் சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அனைத்துக்கும் வாஷிங்டனும் அதன் முதலாளித்துவமும் மட்டுமே காரண மாகக் கண்டறிந்தார்.
சுற்றுப்பயணம் முடிந்ததும், மனம் முழுக்க வேதனைகளைச் சுமந்தவராக அர்ஜென்டினா திரும்பினார். ஒருவித குற்ற உணர்ச்சியில் பீடிக்கப்பட்டவராக இருந்தார் ‘சே’.

1953&ம் ஆண்டு மருத்துவப் பட்டம் பெற்றதும், சே அங்கிருக்கப் பிடிக் காமல், ஒரு நண்பரின் ஆலோசனை யில்பேரில், குவேதமாலாவுக்குப் பணி நிமித்தம் சென்றார். ஏற்கெனவே அவருக் குள் உருவாகியிருந்த அமெரிக்கா மீதான கோபத்தை குவேதமாலாவின் அரசியல் சூழல் அதிகப்படுத்தியது. அப்போது குவேதமாலாவை ஆண்டு கொண்டு இருந்த அர்பான்சோ என்னும் கம்யூனிஸ்ட் ஆதரவு அரசைக்கவிழ்க்க, அமெரிக்கா தன் சி.ஐ.ஏ. மூலமாக தீவிரமாகச் செயல்பட்ட தருணம்.

‘சே’, அங்கிருந்த கம்யூ னிஸ்ட்களுடன் தன்னை இணைத் துக்கொண்டு, அமெரிக்காவுக்கு எதி ரான வேலைகளில் ஈடுபடத் தொடங் கினார். ஆனால்,
அமெரிக்கா தனது எண்ணத்தைச் சுலபமாக நிறை வேற்றி ஜேக்கப் அர்பான்சோ அரசைக் கவிழ்த்தது.

இக்காலகட்டங்களில் கம்யூ னிஸ்ட்களிடம் நெருங்கிப் பழகிய ‘சே’, மார்க்ஸிய லெனினியப் பாதை தான் தனது பாதை என்பதை உணர்ந் தார். அது குறித்த ஆய்வுகளையும் அவர் மேற்கொண்டார். விவசாயி களிடம் குவேதமாலா அரசு, ஆயுதங் களைக் கொடுத்துப் போராட்டத்தில் ஈடுபடச் செய்திருந்தால் அமெரிக்கா வின் சதியை முறியடித்திருக்கலாம் எனும் பார்வையில், ‘சே’ கட்டுரைகள் எழுதினார். இதனால் சி.ஐ.ஏ&வின் பார்வைக்கு இலக்கானார். பாது காப்புக்காக
அர்ஜென்டினா தூத ரகத்தில் தங்க நேரிட்டது.

தொடரும்
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: